வெற்றி மேல் வெற்றி பெற்று, பிரான்ஸின் பேரரசனாக தன்னை அறிவித்துக் கொண்ட நெப்போலியனுக்கு பெரும் உறுத்தலாக இருந்தது பிரிட்டன்தான். கடற்படையில் அத்தனை பெரிய பலசாலிகளாக திகழ்ந்தார்கள் பிரிட்டிஷார். தரைப்படை நடத்துவதில் தன்னிகரற்றுத் திகழ்ந்த நெப்போலியனுக்கு, இந்த கடற்படைதான் தண்ணி காட்டியது என்றால் மிகையல்ல.
1801-ம் ஆண்டு பிரிட்டன் மீது படையெடுத்து அந்த நாட்டையே உருத்தெரியாமல் அழித்துவிட வேண்டும் எனும் அளவுக்கு கடும் கோபம் கொண்டிருந்தார் நெப்போலியன். தனது தளபதிகளிடம், ‘பிரிட்டன் என்றொரு நாடு உலக வரைபடத்திலேயே இல்லை’ என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்” என்று கமெண்ட் அடித்தார் என்றால் அவரது பிரிட்டிஷ் வெறுப்பு புரிந்திருக்கும்.
அவரது மனம் இந்த அளவு வெறுத்தாலும், உண்மையில் பிரிட்டனை தோற்கடிப்பது அத்தனை சுலமாக இல்லை. பொருளாதார ரீதியாகவும் நொடித்துப் போயிருந்தது நாடு. இந்த காலகட்டத்தில்தான் தனது ஆதிக்கத்திலிருந்த வட அமெரிக்காவின் பெரும்பகுதியை ஏக்கர் வெறும் 3 சென்ட்டுக்கு விற்று சமாளித்தார் நெப்போலியன். அதாவது ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பை வெறும் ரூ 400 க்கும் குறைவாக (7.4 டாலர்) விற்றுள்ளார்!!
ஒரே ஆண்டில் நிர்வாகத்தைப் புரட்டிப் போட்ட நெப்போலியன்!
பிரிட்டன் பக்கமும் இதே நெருக்கடிதான் கிட்டத்தட்ட. எனவே அந்த நேரத்தில் ஒரு தற்காலிக ஒப்பந்தம் போட்டார் பிரிட்டனுடன். பிரான்ஸின் அமியன்ஸ் எனும் இடத்தில் கையெழுத்தானது அந்த அமைதி ஒப்பந்தம், 1801 மார்ச் 25-ல். ஆனால் அதுவும் அற்பாயுளில் முறிந்தது. 1802-ம் ஆண்டே மீண்டும் போர்மேகங்கள் கவியத் தொடங்கின.
1789 முதல் 1815-ம் ஆண்டு வரை நடந்த பிரெஞ்சு யுத்தம் என்ற சரித்திரப் புகழ் வாய்ந்த போர்க்காலத்தில் ஐரோப்பா அமைதியாக இருந்தது இந்த ஒரு ஆண்டு மட்டுமே.
ஆனால் இந்த ஒரே ஆண்டில் அவர் செய்த சீர்திருத்தங்கள் பிரமிப்பூட்டுபவை. இன்றுவரை நெப்போலியன் அறிமுகப்படுத்திய திட்டங்கள், அரசியல் சட்டங்களே பிரான்ஸில் பெரும்பாலும் நடைமுறையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பிரான்ஸுக்கென சிவில் கோடு, ராணுவச் சட்டம், சாலை – பாதாள சாக்கடைத் திட்டம் உள்ளிட்ட சிறப்பான உள்கட்டமைப்பு வசதி,
நாட்டின் சிறந்த குடிமகன்கள், வீரர்கள், கலைஞர்களை கவுரவிக்கும் விருதுகளை 1802-ம் ஆண்டு நெப்போலியன் அறிமுகப்படுத்தினார். அதில் ஒன்றுதான் செவாலியே விருது!
குற்றவாளிகளைத் தண்டிப்பதில் இன்றும் பிரான்ஸில் நடைமுறையில் உள்ளது நெப்போலியன் சட்டம்தான் (Code of Napoleon).
பொருளாதார நிர்வாகத்தை அத்தனை சிறப்பானதாக, ஒரு திட்டமிட்ட அமைப்பாக மாற்றியவரும் நெப்போலியனே. பிரான்ஸ் மத்திய வங்கி, புதிய நாணய முறை, ஒருமுகப்படுத்தப்பட்ட நிர்வாக முறை என எல்லோரும் வியந்து பார்க்கும் புதிய முறைகளை, எந்த நாட்டு பாதிப்பும் இன்றி நெப்போலியன் உருவாக்கியது இன்றும் சரித்திர ஆய்வாளர்களால் வியந்து பார்க்கப்படுகிறது.
ஆனால் நெப்போலியனை மிகச் சிறந்த நிர்வாகியாகத் தொடர்ந்து இருக்க விடவில்லை பிரிட்டன். 1803-ம் ஆண்டு மீண்டும் பிரான்ஸ் மீதான போரை அறிவித்தது பிரிட்டன்.
இதற்கிடையில் நெப்போலியன் தனக்கு பேரரசனாக முடிசூட்டிக் கொள்ள முடிவெடுத்து, அந்த வைபவத்தை நிறைவேற்ற போப் ஆண்டவரை வரவழைத்தார் (முந்தைய பகுதியில் இதை விரிவாகச் சொல்லவில்லை).
1804-ம் ஆண்டு, டிசம்பர் 2-ம் தேதி போப் ஆண்டவர் தனது கையில் பேரரசனுக்கான கிரீடத்தை வைத்துக் கொண்டு நிற்கிறார். ஆனால் அவர் கிரீடத்தை கடைசி நேரத்தில் சூட்டாமல் சதி பண்ணி விடுவாரோ என்ற சந்தேகம் நெப்போலியனுக்கு. பார்த்தார்… சட்டென்று அதை போப் கையிலிருந்து பிடுங்கி தானே சூட்டிக் கொண்டார்!
மனைவி ஜோஸப்பினை பேரரசியாக அறிவித்தார்.
பீத்தோவனின் கோபம்…
பின்னர் 1805-ம் ஆண்டு தனது ஆதிக்கத்திலிருந்த இத்தாலிக்கு ஒரு விஸிட் அடித்து, அங்கும் பேரரசனாக மிலன் தேவாலயத்தில் முடிசூட்டிக் கொண்டார். அப்போது 18 மார்ஷல்களை அறிவித்தார் நெப்போலியன். ஒருவர் செய்த பெரும் சாதனைகளுக்காக மன்னர்களால் அளிக்கப்படும் பெரும் கவுரவம் இந்தப் பதவி.
இதில்தான் நெப்போலியன் மீது பெரும் மனவருத்தம் கொண்டார் இசை மேதை பீத்தோவன். காதுகேளாத நிலையிலும் 9 சிம்பனிகளை அமைத்து சாதனை புரிந்தாரே, அதே பீத்தோவன்தான்.
நெப்போலியன் மக்களாட்சியின் காவலனாக இருப்பார் என்று எதிர்பார்த்து அவரை தீவிரமாக ஆதரித்து வந்தவர் பீத்தோவன். ஆனால் மன்னராட்சியின் நீட்சியாக வந்து பதவிப் பிச்சை போடுபவராக நெப்போலியன் மாறியது பிடிக்காமல் போனது. அப்போது பீத்தோவன் தனது 3 வது சிம்பனியை அமைத்துக் கொண்டிருந்ததாக வரலாறு கூறுகிறது.
உள்நாட்டுச் சீர்திருத்தங்கள், தனது ஆளுகைக்குட்பட்ட நாடுகளிலும் தன்னை பேரரசனாக நிலைநிறுத்துதல் என நெப்போலியன் பிஸியாக இருந்த நேரத்தில், பிரிட்டன் குழிபறிப்பு வேலையில் தீவிரமாக இறங்கியது.
நெப்போலியனின் கட்டாயக் கூட்டாளிகளான ஆஸ்திரியா மற்றும் ரஷ்யாவின் மனதைக் கரைத்த பிரிட்டன், நெப்போலியனுக்கு எதிராக போர் அறிவிப்பு செய்தது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மேற்கில் ஆங்கிலக் கால்வாய் வழியாக தனது ஸ்பெயின் – பிரெஞ்சு கூட்டு கடற்படையைக் கொண்டு பிரிட்டனுக்குள் ஊடுருவலாம் என நெப்போலியன் திட்டமிட்டார். ஆனால் அதனை முறியடித்துவிட்டது பிரிட்டன்.
அதேநேரம் கிழக்கு முனையில், ரஷ்யாவின் துணையுடன் பிரான்ஸை ஊடுருவ ஆஸ்திரியா முயன்றதை அறிந்த நெப்போலியன், தன் படையை உல்ம் பகுதிக்கு திரும்புமாறு ரகசிய உத்தரவிட்டார். ரஷ்யப் படைகள் ஆஸ்திரியாவுடன் கைகோர்ப்பதற்குள் வேகமாக குறுக்கே புகுந்த பிரெஞ்சுப் படைகள் ‘ஆஸ்ட்ரலிட்ஸ்’ எனும் இடத்தில் ஆஸ்திரியப் படையைச் சிதறடித்து ஆயிரக்கணக்கான வீரர்களைச் சிறைப்பிடித்தனர்.
பிரிட்டனுடன் கடற்போரில் தோற்றாலும், இன்னொரு எதிரியை புரட்டியெடுத்த திருப்தி நெப்போலியனுக்கு. அந்த திருப்தியுடன், தான் பேரரசனானதன் முதலாண்டு நிறைவைக் கொண்டாடினார் 1805-ம் ஆண்டு!
1806- 1807-ல் ரஷ்யப் படைகளுக்கு எதிராக போலந்தில் தொடர் வெற்றிகளைப் பெற்ற நெப்போலியனுடன் வேறு வழியின்றி டில்சிட் ஒப்பந்தம் போட்டுக் கொண்டது ரஷ்யா.
1807-ம் ஆண்டு ஐரோப்பாவையே இரு பிரிவாகப் பிரித்தார் நெப்போலியன். அன்றைய பிரஸ்யா வரையிலான (ஜெர்மனி) பகுதி முழுக்க நெப்போலியன் வசம் வந்தது. அந்தப் பிரதேசத்திலிருந்த நாடுகளிலெல்லாம் தனது நண்பர்களையும் உறவினர்களையும் நியமித்தார் நெப்போலியன்.
பிரிட்டனுக்கு எதிரான பொருளாதாரத் தடை!
கிட்டத்தட்ட ஐரோப்பாவே தனது பிடிக்குள் வந்துவிட்டதை உணர்ந்த நெப்போலியன் உனடியாக இதனை பிரிட்டனுக்கு எதிராகப் பயன்படுத்த திட்டமிட்டார். பொருளாதாரத் தடையை அறிவித்தார், கான்டினென்டல் சிஸ்டம் எனும் பெயரில். பிரிட்டனுடன் எந்த நாடும் வர்த்தக உறவு, பொருள்களை இறக்குமதி – ஏற்றுமதி செய்யக்கூடாது, பிரிட்டிஷ் கப்பல்களைப் புறக்கணித்தல் போன்றவை இந்த தடைக்குள் அடங்கும்.
ஆனால் நெப்போலியன் எதிர்பார்த்த மாதிரி இது அத்தனை வெற்றிகரமாக நிறைவேறுவதாகத் தெரியவில்லை. காரணம் கடலில் பிரிட்டன் அசைக்க முடியாத சக்தி. எனவே திருட்டுத்தனமாக பிரிட்டனுடன் வர்த்தக உறவைத் தொடர்ந்தனர் நெப்போலியன் கட்டுப்பாட்டிலிருந்த நாட்டினர்.
குறிப்பாக போர்ச்சுக்கல், நெப்போலியனின் ஆணையை அப்பட்டமாக மீறியது. கடும் கோபம் கொண்ட நெப்போலியன் ஸ்பெயின மற்றும் போர்ச்சுக்கள் நாடுகளை ஆக்கிரமித்தார். தனது படையில் மிகத் தேர்ந்த, திறமை வாய்ந்த 3 லட்சம் வீரர்களை இதில் ஈடுபடுத்திவிட்டு இவர் பிரான்ஸ் திரும்ப, பிரிட்டன் – போர்ச்சுக்கள் மற்றும் ஸ்பெயின் கொரில்லாப் படை ஒன்று சேர்ந்து நெப்போலியன் படையை சிதறடித்தன. இதனை தீபகற்பப் போர் என்கிறது சரித்திரம். இதில் நெப்போலியனுக்கு பெரும் இழப்பு, ராணுவ-பொருளாதார ரீதியாக.
இதுதான் மிகப்பெரிய அடியாக விழுந்தது நெப்போலியனுக்கு. “வாழ்க்கையில் நான் செய்த பெரும் தவறு இந்த தீபகற்பப் போர்கள்தான்” என்று பின்னர் ஒருமுறை அவரே கூறியுள்ளார்.
போப் பட்ட பாடு!
1809-ம் ஆண்டு மீண்டும் ஒரு பெரும் போருக்கு தயாராகின பிரெஞ்சுப் படைகள். இம்முறையும் பிரிட்டன்தான் ஆஸ்திரியாவை நெப்போலியனுக்கு எதிராகத் தூண்டிவிட்டது.
அந்த நேரத்தில் போப் ஆண்டவர் கட்டுப்பாட்டில் இருந்த பல நாடுகள் நெப்போலியனின் பொருளாதாரத் தடையை ஏற்க மறுத்தன. எனவே அந்த நாடுகளையெல்லாம் பிரெஞ்சு சாம்ராஜ்யத்துடன் இணைத்துக் கொண்டார் நெப்போலியன். ஒரு சிறிய படைப்பிரிவு ரோமிலிருந்து போப் ஆண்டவரையே கடத்திச் சென்றுவிட்டது. ஆனால் இப்படிச் செய்யும்படி நெப்போலியன் சொல்லவில்லை. எனவே போப் விடுதலை குறித்தும் அவர் அலட்டிக் கொள்ளவில்லை. 1814-ம் ஆண்டு வரை போப் ஆண்டவரால் வாடிகனுக்கு திரும்ப முடியவில்லை!
இதற்கிடையே, நெப்போலியன் மனைவி ஜோஸப்பின் விவாகரத்து பெற்றுவிட, 1910-ல் மேரி லூசி என்ற ஆஸ்திரிய இளவரசியை திருமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணத்துக்கு வராமல்போன கார்டினல்களுக்கெல்லாம் நெப்போலியன் தண்டனை கொடுத்தது தனிக் கதை!
தொடரும்…
குறிப்பு: இந்தப் பகுதியை எழுதத் தொடங்கியதே, நெப்போலியனின் ரஷ்யப் படையெடுப்பை மட்டும் விவரித்து எழுதும் நோக்கில்தான். சரித்திரத்தில் யாரும் மறக்க முடியாத போர் நிகழ்வு அது. ஆனால் நெப்போலியனைப் பற்றி முடிந்தவரை விரிவாக முழுமையாகத் தரவேண்டும் என்பதால் இதனை நான்கு பிரிவாக எழுத வேண்டியுள்ளது. ரஷ்யப் படையெடுப்பு மற்றும் நெப்போலியனை வீழ்த்திய வாட்டர்லூ போர் பற்றி அடுத்தடுத்த பகுதிகளில்…






