இருட்டில் தமிழகம்: சென்னைக்கு வெளியே 7 மணிநேரம் மின்வெட்டு… உற்பத்தி பாதிப்பு, தொழிலாளர் பணியிழப்பு!


தமிழ்நாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி குறைந்துள்ளதால் ஏழு மணி நேரம் வரை மின் வெட்டு அமலாக்கப்படுகிறது. இந்த மின் வெட்டினால் மாநிலம் முழுவதும் தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் அதிகபட்சம் மூன்று முதல் நான்கு மணிநேரமாக இருந்தது மின்வெட்டு. அதுவும் கோடையில்தான் இந்த மின்வெட்டு இருக்கும். மழைக் காலங்களில் ஒருபோதும் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டதில்லை. மழை, காற்று, இடி போன்ற இயற்கை தடைகளால் சில மணிநேரம் அவ்வப்போது மின்சாரம் நிற்கும்.

கடந்த 2010-ம் ஆண்டில் கூட மின்வெட்டு என்பது செப்டம்பர் மாதம் வரை நீடித்தது. மீண்டும் பிப்ரவரி 2011-ல் அமலுக்கு வந்தது.

ஆனால் இப்போதோ கோடை, மழைக்காலம் என எந்த பேதமும் இன்றி ஒரே சீராக தொடர்கிறது, மின்வெட்டு!

எவ்வளவுதான் உற்பத்தி?

தமிழக மின் நிலையங்களின் மூலம் 3,560 மெகாவாட், தனியார் மின் நிலையங்களால் 940 மெகாவாட், மரபுசாரா எரிசக்தி மூலம் 100, காற்றாலைகளால் 1,150, மத்திய தொகுப்பால் 2,060 மெகாவாட் மின்சாரம் கிடைத்துள்ளது. 800 மெகாவாட் மின்சாரம், தனியாரிடமிருந்து வாங்கப்பட்டுள்ளது.

இதுபோக 3,700 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறையாக உள்ளது. இதனால் கடும் மின்வெட்டு அமலாக்கப்பட்டு வருகிறது.

இதற்கு தமிழக மின்வாரியம் பல்வேறு காரணங்களை தெரிவித்து வருகிறது. நிலக்கரி இருப்பு குறைவு, பராமரிப்பு, நிலையங்களில் கோளாறு, தளவாட பொருட்களுக்கு பற்றாக்குறை என வரிசையாக காரணங்களை சொல்கிறார்கள்.

இதனால் சென்னை தவிர மாநிலத்தின் மற்ற பகுதிகள் பயங்கர மின் வெட்டை சந்தித்து வருகின்றன. கிட்டத்தட்ட 7 மணி நேரம் கரண்ட் இல்லை. மூன்று மணி நேரம் தொடர்ச்சியாகவும், பின்னர் 4 மணி நேரம் சுழற்சி முறையிலும் பவர் கட் ஆகிறது. குறிப்பாக வட தமிழகம் இதில் முடங்கிப் போயுள்ளது.

சென்னையில் தினமும் ஒரு மணி நேரமும் புறநகர்களில் 2 மணிநேரம் வரையிலும் மின்வெட்டு அமலாக்கப்படுகிறது.

தொழிற்சாலைகளில் பாதிப்பு:

இதனால் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது கோவை, திருப்பூர், ஈரோடு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள்தான்.

பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பண்டிகை காலத்தில் மேற்கொள்ளப்படும், நாள்காட்டி, ஆயத்த ஆடைகள், வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்டவற்றின் உற்பத்தி பணிகள், மிகுந்த பாதிப்பு அடைந்துள்ளன.

லாந்தருக்கு மாறிய கிராமங்கள்

இரவு நேரங்களில் நீண்ட நேரம் மின்சாரமே இல்லாமல் போவதால், வேறு வழியின்றி மீண்டும் கிராமப்புறங்களில் லாந்தர், சிம்னி விளக்குகள் புழக்கத்துக்கு வந்துள்ளன.

ஏற்கெனவே பாசன வசதியில்லாமல் விவாசயம் பட்டுப் போன நிலையில், மின்சாரமும் இல்லாமல் போனதால் விவசாய வேலைகளும் முடங்கியுள்ளன.

இதற்கிடையே, மின்வெட்டோடு, விரைவில் மின் கட்டணத்தையும் தமிழக அரசு உயர்த்தவுள்ளது.

மின் கட்டணத்தை உயர்த்தச் சொல்லி தமிழக மின் வாரியம் சார்பில் கடந்த 17ம் தேதி, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மனு தாக்கல் செய்யப்பட்டது. இது வரும் 25ம் தேதி, ஆணைய சேர்மன் கபிலன் முன் விசாரணைக்கு வருகிறது. மின் வாரியம் சார்பில் அதன் தலைவர் ராஜிவ் ரஞ்சன் ஆஜராகி விளக்கம் சொல்கிறார்.

அதற்குப் பிறகு மின் கட்டணத்தை அதிகரிக்க ஆணையம் அனுமதி வழங்கும் என்று தெரிகிறது.

மின்கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என முன்கூட்டியே முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மக்களை மெல்லக் கொல்லும் ஜெயலலிதா!


‘அரசாங்கம் வியாபாரியல்ல, வருமானம் போதவில்லை, நஷ்டம் வந்துவிட்டது என்று கூறி விலையை உயர்த்தி மக்களைச் சுரண்டுவதற்கு. அத்தியாவசியப் பொருள்கள் விலைகளை உயர்த்துவது மக்களை மெல்லக் கொல்வதற்கு சமம். இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்தப் போக்கை கண்டித்து மக்கள் போராட்டத்தில் இறங்க வேண்டும்…’

-இதனை நாம் சொல்லவில்லை, பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள் கொதித்துப் போய்ச் சொன்ன தீர்ப்பு இது.

மக்களை மெல்லக் கொல்ல ஆரம்பித்துவிட்டாரோ ஜெயலலிதா என்ற கேள்விதான் இந்த இரு தினங்களும் மனதை அரித்துக் கொண்டே இருக்கிறது.

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து 6 மாதங்களாகின்றன. இந்த 6 மாதங்களில் அவர் உருப்படியாக எதையுமே செய்யவில்லை. அட, செய்யாமல் போனாலும் பரவாயில்லை… இருப்பதையும் நாசமாக்கி நஷ்டத்துக்கு மேல் நஷ்டத்தையே ஏற்படுத்தி வருகிறார்.

ஆட்சிக்கு வந்த கையோடு, வழக்கம்போல திமுக அரசு கஜானாவை சுரண்டிவிட்டுப் போய்விட்டது என்ற வசதியான காரணத்தைச் சொல்லி ரூ 4000 கோடிக்கு மேல் வரிகளை உயர்த்தினார். ஆண்டுக்கு ரூ 1600 கோடிக்கு மதுபான விலைகளை உயர்த்தினார்.

இப்போது தமிழக மக்கள் இதற்கு முன்பு பார்த்தும் கேட்டும் அறியாத அளவுக்கு ஏகத்துக்கும் பால் விலை, பஸ் கட்டணத்தை உயர்த்தியுள்ளார். குறிப்பாக பஸ் கட்டணம் 70 சதவீத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. போக்குவரத்துக்கு பஸ்களை மட்டுமே நம்பியுள்ள பெரும்பான்மை மக்கள், இனி மாற்று வாகனங்களை நாடியே தீர வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுவிட்டனர்.

அடுத்து மின் கட்டணத்தை யூனிக்கு ரூ 1.50 அல்லது 2 வரை உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாக மின்வாரியும் அறிவித்துள்ளது.

இந்த மக்கள் விரோத செயல்கள் அனைத்துக்கும் மத்திய அரசு நிதி தரவில்லை என்றும், முந்தைய திமுக அரசு முக்கிய காரணம் என்றும் கூறி தப்பிக்கப் பார்க்கிறார்.

உண்மையில் மத்திய அரசு நிதியே தரவில்லையா?

இதோ இதே ஜெயலலிதா கடந்த ஜூன் மாதம் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் திட்டக்கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவைச் சந்தித்த பிறகு கூறியதைப் படியுங்கள்:

“பிரதமர் மற்றும் திட்டக்கமிஷன் துணைத் தலைவருடனான சந்திப்பு பயனுள்ள வரையில் இருந்தது. நான் அலுவாலியாவிடம் ரூ 20000கோடிதான் தொகுப்பு நிதியிலிருந்து கேட்டேன், ஆனால் 23467 கோடி அளித்துள்ளார்கள். மிக்க மகிழ்ச்சியைத் தரும் அறிவிப்பு இது. மத்திய அரசுக்கு நன்றி,” என்று பேசிய அதே ஜெயலலிதா வாய்தான் இப்போது மத்திய அரசைத் திட்டுகிறது!

அதாவது ஜெயலலிதா கேட்டதை விட ரூ 3467 கோடியை அதிகமாகவே கொடுத்துள்ளது மத்திய அரசு.

அடுத்து, எப்போதும் போல கண்ணை மூடிக் கொண்டு அவர் குற்றம்சாட்டுவது திமுகவை. அவர்கள் கஜானாவை துடைத்துவைத்துவிட்டார்களாம். கஜானா என்பது அவர்கள் வீட்டு பீரோவா என்ன, திறந்ததும் எடுத்துக் கொண்டு போவதற்கு?

எந்தெந்த வழிகளில் பணத்தைச் சுரண்டி திமுகவினர் எடுத்துக் கொண்டார்கள் என்பதை இப்போது ஆட்சிப் பொறுப்பிலிருக்கும் ஜெயலலிதா வெளிப்படையாக சொல்லலாமே. அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளலாமே… யார் தடுத்தார்கள்?

இந்த விலை உயர்வு தமிழக மக்கள் அனைவர் மனதிலும் ஒரு பெரும் சவுக்கடியாய் விழுந்திருப்பதை இந்த இரு தினங்களில் நேரில் பார்க்க முடிந்தது. ஜெயலலிதா என்ன செய்தாலும் சரிதான் என ஜால்ரா அடிக்கும் ஒரு கூட்டம் வழக்கம்போல, ‘ஆஹா… ஜெயலலிதாவின் துணிச்சல் யாருக்கு வரும்’ என்று ஈனஸ்வரத்தில் முனகாமல் இல்லை.

சம்பளம் அதிகமாகிவிட்டதாம்… அதனால் இந்த விலை உயர்வு சரிதான் என்று வெட்டி நியாயம் சொல்கிறது இந்தக் கூட்டம்.

தமிழகத்தில் வேலைக்குப் போய் சம்பளம் பெறும் குடும்பம் அதிகபட்சம் 9 சதவீதம் கூட இல்லை. இதில் அரசுத் துறை பணியாளர்கள் வெறும் 2 சதவீதத்துக்கும் குறைவு. அதாவது தமிழக மக்கள் தொகையான 7.5 கோடியில் 2 சதவீதம்!

இவர்களின் வாக்குகளை மட்டுமே மனதில் கொண்டு மேலும் மேலும் சம்பளத்தை ஏற்றி வந்திருக்கிறார்கள் கருணாநிதியும் ஜெயலலிதாவும். இதன் பலன், மாநிலத்தின் மொத்த வருவாயில் 98 சதவீதம், அரசு செலவுகள், பணியாளர் சம்பளம் மற்றும் இதர வகைக்கே போய்விடுகிறது. 98 சதவீத அரசு வருவாயை அரசுப் பணி்யாளர்களை போஷிப்பதற்கே செலவிடுகிறது அரசு. எஞ்சியுள்ள 2 சதவீத வருவாய் மற்றும் புதிய கடன்களே தமிழக மக்களின் நலப் பணிகளுக்குப் போகிறது.

இந்த உண்மையைக் கூட நாம் சொல்லவில்லை. கடந்த முறை ஆட்சியிலிருந்த ஜெயலலிதா, அரசுப் பணியாளர் விழாவில் சொன்னவை.

அரசுப் பணியாளர்களுக்கு கருணாநிதியும் ஜெயலலிதாவும் போட்டி போட்டுக் கொண்டு சம்பளத்தையும் இதர படிகளையும் உயர்த்துவது எதற்காக? ஒரு அரசுப் பணியாளருக்கு தேவைக்கும் அதிகமாகவே இன்று சம்பளம் வழங்கப்படுகிறது. மக்களிடம் வரிகளாகவும் மறைமுக வருமானங்களாகவும் சுரண்டுவதை அப்படியே அரசுப் பணியாளர்களுக்கு கொட்டுவதை நிறுத்தினாலே, பல ஆயிரம் கோடி மிச்சப்படுமே!

மக்கள் வரிப்பணத்தை மக்கள் நலத்திட்டங்களுக்கு முறையாகப் பயன்படுத்த வேண்டும். மிகக் குறைந்த ஒரு பிரிவினருக்கு மட்டுமே முழு வருமானத்தையும் செலவழித்துவிட்டு, பற்றாக்குறைக்கு கடன் வாங்கி, அந்த சுமையையும் ஏழை எளிய மக்கள் மேல் சுமத்தும் போக்கை திமுக, அதிமுக என எந்த அரசும் நிறுத்துவதாகத் தெரியவில்லை.

இந்த விலை உயர்வை சம்பளம் பெறுவோர் சமாளிக்கக் கூடும்.  கூலிகள், ஏதோ ஒரு தொழில் செய்து பிழைப்பை ஓட்டும் சாமானியர் எப்படிச் சமாளிப்பார்கள் என்று யோசிக்க வேண்டாமா?

இன்னொன்று, தேவையற்ற இலவசங்கள்.

ஆடு மாடுகள், லேப்டாப், மிக்ஸி, கிரைண்டர், பேன்… இந்த ஓட்டு லஞ்சத்தை யார் கேட்டார்கள்? இந்த இலவசங்களைத் தருவதற்காக இருக்கிறவர்களை வதைப்பது ஏன்? நீதிமன்றம் மூலம் இதற்கொரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.

போலீஸ்காரர்களுக்கு வருமானமில்லையா என்ன… எதற்காக அவர்களுக்கு மலிவு விலைக் கேண்டீன்கள்? இந்த தண்டச் செலவும் மக்கள் தலையில்தானே விடியும்!

பொதுத்துறை நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குவதாகவும், எந்த நேரத்திலும் செத்துப் போகும் நிலையில் இருப்பதாகவும் பிலாக்கணம் பாடியுள்ளார் ஜெயலலிதா.

இதற்கு முழுக்க முழுக்க ஆட்சியாளர்களே காரணம். பொதுத்துறை நிறுவன ஊழியர்களின் சோம்பேறித்தனம், மோசமான நடத்தை, யோக்கியமற்ற செயல்கள் போன்றவற்றை திமுக – அதிமுக அரசுகள் மாறி மாறி ஊக்கப்படுத்திக் கொண்டுதான் வந்துள்ளன. இந்த ஊக்கப்படுத்தல், கடைசியில் நிறுவனத்தையே விழுங்கும் அளவுக்குப் போயிருக்கிறது.

போக்குவரத்துத் துறையை சீரழித்ததில் கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் சம பங்கு உள்ளது. 1996-97-ல் எம்ஜிஆர் போக்குவரத்துக் கழகத்தில் மட்டும் ரூ 900 கோடி நஷ்டம். இதற்குக் காரணம் என்னவென்று ஆராய்ந்தபோது, பழைய பஸ்களை சீர்படுத்தி ஓட்டுவதற்கு ஆகும் செலவு, உதிரி பாகங்கள் வாங்குவதில் அடிக்கப்படும் கொள்ளை போன்றவைதான் என்று தெரியவந்தது.

அதாவது ஒரு புதிய பஸ்ஸை வாங்கி ஓட்டுவதற்கு ஆகும் செலவை விட, பழைய பஸ்களை பராமரித்து ஓட்டும் செலவு அதிகம் என்று எம்ஜிஆர் போக்குவரத்துக் கழகத்தின் வரவு செலவை ஆராய்ந்தவர்கள் சொன்னார்கள். இருந்தும் ஏன் போக்குவரத்துக் கழகங்கள் புதிய பேருந்துக்கு மாறவில்லை? மாறிவிட்டால் எப்படி கொள்ளையடிக்க முடியும்… அதனால்தான் பழைய பஸ்களுக்கு செலவுக் கணக்குக் காட்டி, லாபத்தில் இயங்கும் நிறுவனங்களை நஷ்டக் கணக்கு காட்ட வைக்கின்றன.

அமரர் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவிலேயே சிறந்த பஸ் போக்குவரத்து உள்ள மாநிலம் என தமிழகம் 3 முறை விருதுகளை வென்றது. அவர் மறைவுக்குப் பிறகு அந்த விருதை தொடர்ச்சியாகப் பெற்ற ஒரே மாநிலம் கர்நாடகம்தான்.

இன்று நாட்டின் மிகக் கேவலமான ஓட்டை உடைசல் பேருந்துகளைக் கொண்ட மாநிலங்களுள் ஒன்றாகத்தான் தமிழகம் திகழ்கிறது. நான்கு வழித்தடங்களில் நான்கு பேருந்துகள் இருந்தாலே ஒருவர் கோடீஸ்வரனாகிவிட முடியும். அப்படியொரு லாபகரமான வர்த்தகம் போக்குவரத்துத் துறை. ஆனால் 95 சதவீத போக்குவரத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ள அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக ஆட்சியாளர்கள் கூறுவது எத்தனை பெரிய அயோக்கியத்தனம்?

நிர்வாகத்தைச் சீரமைப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா முதலில் வெட்டிச் செலவுகள், ஓட்டை பஸ்களுக்கு உதிரி பாகங்கள் என்ற பெயரில் அடிக்கப்படும் கொள்ளை, லாபகரமான வழித்தடங்களில் தனியார் பஸ்கள் நன்றாக இயங்க ஒத்துழைப்பு தரும் அயோக்கிய பணியாளர்கள்… இவற்றையெல்லாம் களைந்திருந்தாலே, நிறுவனங்கள் லாபத்துக்குத் திரும்பியிருக்குமே!

இந்த விலை உயர்வு மூலம், வெளிப்பட்டிருப்பது இரண்டு விஷயங்கள்… ஒன்று ஜெயலலிதாவின் நிர்வாகத் திறமையின்மை. இன்னொன்று, அடித்தட்டு, கிராமப்புற மக்களைப் பற்றிய அவரது அக்கறையின்மை!

5- சுஜாதாவின் “ஸ்ரீரங்கம்”


Srirangam Rajagopuram sketch by Sujatha Desikan (1993)
ஜீயர் சுவாமிகளின் விடாமுயற்சியால் இன்று இந்தியாவிலேயே மிக உயரமாக எழுந்திருக்கும் ராயகோபுரத்தைச் சுற்றிலும் என்னுடைய இளமை நினைவுகள் அநேகம் உள்ளன. அப்போதெல்லாம் அதற்கு மொட்டைக் கோபுரம் என்று பெயர்.  விஜயநகர ராயர்களின் ஆட்சிக்காலத்தின் விளிம்பில் கட்டப்பட்டதாலோ என்னவோ,  ராஜா இனிமேல் காசில்லை, தீர்ந்து போய் விட்டது என்று சொன்னதால், முற்றுப் பெறாமல் விட்டுப் போன கோபுரத்தை முடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று சின்ன வயசில் வீதிப் பயல்களிடம் கதை அளந்திருக்கிறேன். மேகத்தைத் துளைத்துக் கொண்டு ஒரு எவ்வு எவ்வினால் சந்திரன் மேல் அடியெடுத்து வைக்கலாம் என்று நான் சொன்னதை அப்போதே பலர் நம்பவில்லை. மொட்டைக் கோபுரத்தை பஸ் ஸ்டாண்டிலிருந்து அணுகும்போது வலப் பக்கத்தில் இருந்த மூலைக் கடையில்தான் என் முதன் முதல் சிகரெட் முயற்சி.
ராத்திரி வேலையாகப் பார்த்துச் சிம்னி விளக்கு வெளிச்சம் உள்ள கடையாகத் தேர்ந்தெடுத்து, முகத்துக்குக் குறுக்காகக் கைத்துண்டு போட்டு மூடிக்கொண்டு, இந்தப் பக்கம் அந்தப் பக்கம் நோக்கி வாயின் இடது ஓரமாக, ‘ஒரு சிகரெட்’ என்றேன்.
“என்ன சிகரெட்டு ?  எத்தனையோ சிகரெட்டு இருக்குது ?”
“எ…எ…எ… ஏதாவது !”
“கோதை அம்மா பேரன் தானே நீ ?  எதுக்காக மூஞ்சில சவுக்கம் போட்டிருக்கே ?”
பைசா கொடுத்ததையும் பாராமல் ஓடி வந்து விட்டேன்.

3- சுஜாதாவின் “ஸ்ரீரங்கம்”


“இன்றைய ஸ்ரீரங்கம் திருச்சி கார்ப்பரேஷனின் ஓரங்கம்.  ஏ.டி.எம்.களும் தாறுமாறான கேபிள்களும் அம்மா மண்டபத்திலிருந்து தொடர்ந்து நிற்கும் ஆம்னி பஸ்களும் பெண்கள் கல்லூரியும் புதிய பள்ளிகளும் என்ன என்னவோ நகர்களும் மேம்பாலங்களும் என்னுடைய ஸ்ரீரங்கமல்ல.”

திருவரங்கம் அரங்கநாதர் கோவில் திருப்பணியில் ஒரு சிக்கல் எழுந்தது.  ’திரு உறை மார்பன்’  என்று சிலப்பதிகாரத்தில் சொன்னபடி பள்ளி கொண்டிருக்கும் அரங்கநாதருக்கு மார்பில் ஒரு இலக்குமி வடிவம் உண்டு.
திருப்பணி செய்யும்போது அதற்கு பதில் தந்திர சாஸ்திரத்துக்கு ஏற்ப ஒரு முக்கோணம் வைத்தார்கள். அதை சில பெரியவர்கள் ஆட்சேபித்தார்கள்.  என்னை அணுகினார்கள்.
நான் அமைச்சர் தமிழ்க்குடிமகன் அவர்களுடன் பேசினேன். அவர் உடனே இதைக் கவனித்து அதிகாரிகளுடன் பேசினார். இலக்குமி மறுபடி அரங்கனின் மார்பில் பெண்கள் தினத்தன்று வாசம் செய்யத் துவங்கியிருக்கிறாள்.
இதில் ஒரு சின்ன வியப்பான சமாசாரம், திருவரங்கத்தில் ஓர் ஆஸ்திரேலியர் தன் பெயரை கேசவன் என்று மாற்றிக் கொண்டு, குடுமி வைத்துக் கொண்டு, தினம் பெருமாளுக்கு பெரியாழ்வார் மாதிரி கைங்கரியம் செய்து கொண்டு அண்மைக் காலமாக வாழ்கிறாராம். அவரிடம் தீ விபத்துக்கு முன் எடுத்த பழைய ஃபோட்டோக்களைக் காட்டியபோது, அவர் அவைகளை ஸ்கான் பண்ணி, பஜ் என்று இருந்த அந்த மார்புப் பகுதியை தன் லாப் டாப்பில் ஸ்கேன் பண்ணி, டிஜிட்டலாக அதை பெரிது படுத்தி பிழை நீக்கிப் பார்த்ததில் இலக்குமி தெரிந்தாளாம்.
எனக்கு ஒரு ஹைக்கூ தோன்றியது.
அரங்கன் சந்நிதி
வெள்ளைக்கார குடுமி பக்தர் பையில்
துளசி மாலையுடன்
லாப்டாப்!

 

நெய்வேலி க. தியாகராசன், குடந்தை.
? ஸ்ரீரங்கம் மண்ணில் அடியெடுத்து வைக்கும்போது, இன்று தங்களுக்குத் தோன்றும் முதல் உணர்வு ?
! கோவிலுக்குப் போக வேண்டும் என்பது.
எஸ்.ராமசாமி, லால்குடி.
? ஸ்ரீரங்கத்தின் ஒரு பகுதிக்கு ‘அம்மா மண்டபம்‘ என்று பெயர் வரக் காரணம் என்ன ?
! அது நாயக்கர் காலத்து ராணியின் செல்லப் பெயர் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.

 

எம். மகேந்திரா முருகன், எடுத்தனூர்.

? வைகுண்ட ஏகாதசிக்கு ஸ்ரீரங்கம் சென்றீர்களா ?
! சின்ன வயசில் சென்றிருக்கிறேன்.
மஞ்சுளா கோபாலன்.
? ரங்கநாதர் கோயிலைத் தவிர ஸ்ரீரங்கத்தில் உங்களுக்குப் பிடித்த இடம் எது ?
! கீழச் சித்திரை வீதி.

கண்ணன்.
? இன்றைய ஸ்ரீரங்கம் பற்றி உங்கள் கருத்து என்ன ?
! என்னுடைய ஸ்ரீரங்கம், கோவிலில் மட்டும்தான் பாக்கியிருக்கிறது.  அதிலும் சில இடங்கள்தான்.
காந்தி.
? ஸ்ரீரங்கத்தில் முஸ்லீம்களின் சப்பாத்தி அமுதுடன் கூடிய நம்பெருமாள் தரிசனம் மகிழ்ச்சி அளித்ததா ?  தாத்பர்யம் என்ன ?
! தாத்பர்யம் கோயிலுக்கு ஒரு சிக்கலான கட்டத்தில் மத நல்லிணக்கம் தேவைப்பட்டதே.

சுமன்.
? இப்போதுள்ள ஸ்ரீரங்கத்தில் வாழ விரும்புவீர்களா ?
! சித்திரை வீதியில் என்னால் வாழ முடியும்.

பெ. பாண்டியன், திருமயம்.
? அந்தக் காலத்து ஸ்ரீரங்கத்து தேவதைகளை இப்போது பார்த்தால் அடையாளம் கண்டு புன்னகைப்பதுண்டா ?
! இப்போது அவர்களுக்கெல்லாம் வயசாகி விட்டது.  புன்னகையில் கொஞ்சம் சோகம் கலந்திருக்கிறது.

லலிதா செல்லப்பா, சென்னை – 75.
? திருப்பதி பெருமாளுக்கு இல்லாத என்ன சிறப்பு இருக்கு ஸ்ரீரங்கத்து பெருமாளுக்கு ?
! சயனம்

ஜி.மகேந்திர குமார், பாலக்காடு.
? நீங்கள் பார்த்து, அதிசயித்து, புரிந்து கொள்ள முடியாத விஷயம் உலகில் ஏதாவது உள்ளதா ?
! ‘நீலக்கடலரை மாமணி நிகழக்
கிடந்தது போல் அரவணை
வேலைத் தலைக் கிடந்த மழை முகில்’
என்று ஆழ்வார் பாடிய அரங்கன் எனது மிகப் பெரிய அதிசயம்.